வியாழன், 24 செப்டம்பர், 2015

மைக்குகளின் காடுகள்



மைக்குகளின் காடுகள்
=========================================ருத்ரா




கலைஞர்
=========


தமிழர்களே தமிழர்களே
நீங்கள் கடலில் தூக்கிப்போட்டாலும் ...
தமிழர்களையே  கடலில் தூக்கி
வீசியெறியப்படும் நிலையை க்கூட
அறியாத தமிழர்களை நோக்கியா
இப்படி கவிதை எழுதுகிறார் !
அவரது நம்பிக்கை
எந்தக்கடலாலும்
மூழ்கடிக்கப்பட முடியாத
"தமிழ் " எனும் பெருங்கடல் !


தளபதி
======

தமிழன் எழுச்சியை
மைல் கல் தோறும்
நட்டு வளர்த்தாலும்
தமையன் வடிவில்
குடும்ப நிழல் ஒன்றும்
சூறையாடத்துடிக்கிறதே .
சூழ்கின்றவர்கள்
யார் யார் மசால் வாசனை பிடித்து
மொய்க்கின்றார்கள்
என்பதை அறியும் கூர்த்த சிந்தனையே
இந்த தளபதிக்கு தேவையான வாள் !


வைகோ
========

ஈழத்து வெளிச்சம் வைத்து
தமிழின் விட்டில் பூச்சிகளை
பிடிக்க நினைத்தவருக்கு
பக்கத்து சேரத்து தமிழன் கூட
கொடும்பகைவன் ஆகிப்போனான்.
அந்த முல்லையாறு தானே
இன்னும்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று
"கல் பொருது இறங்கும் மல்லல் பேர் யாறாக "
மணிச்சுடர் வீசிககொண்டிருக்கிறது.
ஆனால் இவரோ
ஒரு கலிங்கப்பட்டிகாரனைகாப்பாற்றுகிறேன்
என்று
திருநெல்வேலிக்காரன் மீதும் 
படையெடுப்பார் போலும் !





"ஒரு ஹெச்.ஜி.வெல்ஸ்"ன் நிழல்

"ஒரு ஹெச்.ஜி.வெல்ஸ்"ன் நிழல்
=========================================================ருத்ரா

உனக்கு தெரியும்
எல்லாமே உனக்குத் தெரியும் என்று.
அதனால் தான்
இந்த கோட்டை கொத்தளங்களை
நீ தேர்ந்து எடுத்திருக்கிறாய்.
நீ ஒரு நாள்
ஹெச் ஜி வெல்ஸின்
இன்விசிபிள் மனிதன் போல்
அந்த உயர் ஆசனத்தில்
கூனி குறுகி உட்கார்ந்து இருக்கும்
அந்த நாயகர் அருகில் உட்கார்ந்து
கவனிக்கிறாய்.
அது எந்த ஆசனம் என்று
அந்த பதஞ்சலி முனிவரிடம்
சுவடியைப் பிடுங்கி தேடுகிறாய்.
உனக்குத்தான் எல்லாம் தெரியுமே
ஆனாலும்
உனக்கு எதுவுமே தெரியவில்லை.
அப்புறம்
கட கடவென்று
ஏதேதோ வாசிக்கப்படுகிறது.
பார்த்தால் கோடி கோடி ரூபாய்கள் என்று
புள்ளிவிவரம் நீள்கிறது.
அவ்வளவும் திட்டங்கள் திட்டங்கள்..
ஒதுக்கீடுகள் ஒதுக்கீடுகள்..
ஏதோ ஒரு பாதாள சாக்கடையின்
குத்தகைக்குள்
அது விழும்போது
அந்த ரகசிய சதவீதங்களும்
உனக்குத்தெரியுமே.
உனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று
உனக்கு தெரியுமே!
ஏனெனில்
உன் ஜனநாயகத்தைக்கூட‌
மின்பொறியில் தான்
பச்சை குத்திக்கொண்டிருக்கிறாய்.
அப்புறம் பார்த்தால்
நீயே விக்கித்துப்போய் நிற்கிறாய்.
மேஜைகள்
தட்டப்படுகின்றன..
தட்டப்படுகின்றன..
தட்டப்படுகின்றன...
.........
என்ன செய்வது?
நீ வீட்டில் உட்கார்ந்து கூட‌
இதை பார்க்கலாம்.
டிவியில் எல்லோரும் எந்திரன்களாய்
மேஜையைத்தட்டும்
அந்த எழில் மிகு காட்சியை.
ஹெச் ஜி வெல்ஸ் நாவலுக்குள் எல்லாம் போய்
அந்த புரியாத "சத்யமேவ ஜயதே"யின் அடியில்
இப்படி வௌவ்வால் போல் கண்ணுக்குத்தெரியாமல்
தொங்க வேண்டியதில்லை.
மைக்குகள் நீர்காக்கைகள் போல்
கழுத்துகள் நீட்டிக்கொண்டிருக்க‌
மேஜைகள் தட்டப்பட்டு தட்டப்பட்டு..
"சட்..போதும் நிறுத்து."
"அதெல்லாம் முடியாது
அந்த நூத்திப்பத்து விதியின்
கடைசிப்பக்கம் வாசிக்கப்பட்டு முடிக்கப்படும் வரை
மேஜைகளின் மீது
இந்த மேள கர்த்தா ராக தாளங்கள்
தொடரும்...தொடரும்.."
"நூத்திப்பத்தா?
அது என்ன?"
மின்னணுப்பொறி வாக்காள விஞ்ஞானியே!
உனக்கு எல்லாம் தெரியும் என்று தான்
உனக்கு எல்லாம் தெரியுமே
"அட..போங்கப்பா
நீங்களும் உங்கள் வாக்கு வங்கிகளும்..."
அவசரமாய்
கீழே இறங்கி
அந்த "ஹெச் ஜி வெல்ஸ் "ன் நிழல்
தட தட வென்று வெளியே
ஓடி விட்டது.
கூனியே குறுகியே நின்ற‌
அந்த தலைவர்
ஏதோ தலையில் இடித்தது போல் இருக்கிறதே
என்று
தடவிப்பார்த்துக் கொள்கிறார்.

===============================================================