புதன், 20 ஜூலை, 2022

தூர எறியுங்கள்

 தூர எறியுங்கள்

_____________________________________________‍‍______

ருத்ரா



சுவரில் ஒரு படம்.

பயங்கரமான ஒரு படம்.

கோரைப்பல் துருத்த நாக்கு தொங்க‌

கையில் பட்டாக்கத்தியுடன்

இடுப்பில் 

வெட்டப்பட்ட கைகள் கோர்த்த 

அரை ஆடையில்

ஒரு ஆவேச உருவம்.

அந்த உருவம் கால் கொண்டு மிதிக்க‌

அடியில் நசுங்கிக்கிடக்கும் உருவமோ

"சிவனின்"உருவம்.

அய்யோ! இது என்ன காட்சி?

சிவனை வதம் செய்யும் காளியா?

நம் மார்பு படபடக்கிறது.

இங்கே

யார் யாரை புண்படுத்துகிறார்கள்?

இந்து மதத்தை

தத்துவம் தத்துவமாக தோலுரிகின்றவர்களே.

புராணம் புராணமாக‌

புரட்டுபவர்களே.

இந்த படக்காட்சியை வைத்துக்கொண்டு பார்த்தால்

"சைவ"த்துக்கும் "சாக்த"த்துக்கும்

இடையே ஒரு ரத்த ஆறு அல்லவா ஓடும்?

நம் அறுமதங்களுக்குள்ளேயே

இத்தனை ரத்தக்களரிகளை வைத்துக்கொண்டு

ஏசு பிரானையும்

அல்லாவையும்

நாம் வம்புக்கு இழுப்பது

என்ன நியாயம்?

வெறும் வெறியை வைத்து ஒழுகும்

மதநீரில்

நம் மண்ணும் மாண்பும் 

கறை பட்டு போகும் காட்சிகள் 

ஏன் உங்கள் கண்களுக்கு

புலப்படவில்லை?

நாலு வர்ணத்துக்குள்ளும்

நாலாயிரம் வர்ணங்களில்

சாதி வெறி பூசி

"மனிதம்"கந்தல் கந்தலாய்

கிழிக்கப்படுவதைக்கண்டு

கொஞ்சமும் கவலைப்படாமல்

உங்கள் மனம் மரத்துப்போய்க்கிடப்ப‌து தான்

சனாதனமா?

அருமையிலும் அருமையான‌

நண்பர்களே!

மானிட அன்பின் வாசனை இல்லாத‌

சித்தாந்தங்களை

குப்பையில் எறியுங்கள்.

சிந்தனை வறண்ட 

பாழ்நிலங்களை பாதுகாக்கும்

சோளக்கொல்லை பொம்மைகள் அல்ல நாம்!

போதும்

இந்த பூச்சாண்டித்தனங்களும்

பொய்மைச்சீற்றங்களும்.

அன்பு தான் சிவம்.

திரி சூலங்கள் அல்ல.

தூர எறியுங்கள் அந்த

ஆயுதங்களை!


______________________________________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக